'அஞ்சான்' திரைப் பட விமர்சனம்

 அஞ்சான் படம் நோஞ்சான்
நான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப் படமும் ஓடியதில்லை (கண்ணுக்குள் நிலவு, ஷாக், பீமா, அருள் இன்னும் சில). அதை விட முக்கியம் எனக்கு பிடித்ததேயில்லை. (நிறைய ஓடாத படங்கள்தான் நமக்குப் பிடிக்குமே, அன்பே சிவம் போல)  ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால்(?) இன்று முதல் நாள் முதல் ஷோ அஞ்சான் பார்த்து விட்டேன்.




இந்தப் படம் ஓடினால் "எப்படி ஓடியது?" என்றெல்லாம் கேள்வி தேவையில்லை. ஏழாம் அறிவு, வேலாயுதம், ஆரம்பம், ஜில்லா, வீரம் எல்லாம் எப்படி ஓடியதோ, அதே போல இதுவும் ஓடியிருக்கும் என்று நினைக்க வேண்டியதுதான். அஞ்சானும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது. இப்படியொரு படத்திற்கு என்னுடைய மாதமொரு பதிவு என்ற சபதத்தை உடைத்து, 75ஆவது பதிவையும் (விளம்பரம்) போடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி வெளியிடுகிறேன். 

கதை என்று பார்த்தால், தன் சகோதரன் ராஜுவைத் தேடி மும்பை வருகிறார் கிருஷ்ணா எனும் சூர்யா. இங்கு வந்தால்தான் தெரிகிறது ராஜூ ஒரு பெரிய ரவுடி, அவனையும் அவனது உயிர் நண்பனையும் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று. இவனையும் கொல்ல வேண்டும் என்று அந்த கும்பல் துரத்த, சில பல திருப்பங்களுடன் இனிதே படம் முடிகிறது.

இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், 'டிவிஸ்ட்' என்று லிங்குசாமி எதெல்லாம் நினைக்கிறாரோ, அது எல்லாம் குழந்தை கூட சொல்லும். படம் பார்க்கும்போது, எனக்கு கேபிள் சங்கர் எழுதியஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.

லிங்கு சார், கே(G)ட்ட அடைக்கிறது எல்லாம் ஒரு படத்துல சரி. இன்னும் பத்து படத்துக்கு அதே சீன வக்கினும்னு நெனச்சா எப்படி. இப்பல்லாம் ரெண்டு வயசு கொழந்தையே, ஒரு தடவ பார்த்த பாட்ட, அடுத்த வாட்டி போட்டா மாத்த சொல்லுது (அனுபவம்). இது சூர்யாவுக்காக பண்ணுன மூணாவது கதையாம். மீதி இருந்த ரெண்டு கதைல ஒன்னத்தான் கார்த்தி அடுத்து நடிக்கப் போற படமாம். மூணாவது கதையே கேவலமா இருக்குன்னா, மீதி ரெண்டு இன்னும் எவ்ளோ கேவலமா இருக்கும்? ப்பா, முடியல.




படத்துல, கிருஷ்ணாகிட்ட ஒருத்தர் கதை சொல்லுவார் "இந்த எடத்துக்கு வர ராஜுவும், சந்துருவும் என்ன வெல கொடுத்தாங்க தெரியுமா?" என்பார். உடனே, பிளாஷ்பேக் வரும். சரி ஏதோ அழுத்தமான காட்சிகள் வரும் என்றால், ஐட்டம் சாங் வருகிறது. அது முடிந்தவுடன் மீண்டும் அதே காட்சி வருகிறது. என்ன எழவோ? இந்த கண்றாவி போதாதென்று காதல் வேறு.

"நிதானமா நின்னு யோசி, உனக்கானவன் உன் கண்ணுல படுவான்" என்று நாயகிக்கு நாயகனே சொல்லுவார் (பிச்சக்காரனுக்கு செக்யுரிட்டி பிச்சக்காரனே, இதுதான் எனக்கும் தோணியது). அப்படி நாயகி யோசிக்கும்போது, நாயகன் அந்தப் பக்கம் போய், துப்பாகியால் ஒருவனை சுடுவார். உடனே நாயகிக்கு காதல் வருகிறது. (இந்த வகையில் எனக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பரவாயில்லை. பில்லா படத்திலும் சரி, ஆரம்பம் படத்திலும் சரி, தேவையில்லாத காதல் காட்சிகள் நாயகன் அஜித்துக்கு இல்லை. அவரக்கு அஜித்தின் மேல் என்ன எரிச்சலோ) 

படத்தில் நகைச்சுவைக்கு குறையே இல்லை. சூரி இருப்பதால் சொல்லவில்லை. அது மொக்கை. நாயகன் ஒரு பெரிய தாதா. நாயகியைக் கடத்தி விட்டதாக போலிஸ் அவரை இரண்டு முறை துரத்துகிறது. நாயகி காதலில் விழுந்து, நாயகனுடன் சுற்றுபோது மீண்டும் நாயகியைக் காணாமல் காவல்துறை தேடுகிறது. அப்போது நாயகனுக்கு போன் பண்ணி "இந்த முறையும் அந்தப் பெண்ணைக் காணவில்லை, ஆனால் நாங்கள் உங்களை சந்தேகப்படவில்லை. இது பார் யுவர் இன்பார்மேசன்" என்பார்கள். உடனே நாயகன் "இல்ல அவ என்னோடத்தான் இருக்கா, நாங்க லவ் பண்றோம். திஸ் இஸ் பார் யுவர் இன்பார்மேசன்" என்பார். இந்த லட்சணத்தில் பெண்ணின் அப்பா, காவல் துறை உயர் அதிகாரி வேறு. இனிமே நான் ஆபிஸ்ல மெயில் அனுப்பும்போது எப்படி FYI போடுவேன்? கன்றாவிடா.

அதே போல உயிருக்கு பயந்து ஓடி ஒளிபவன், ஜாலியாக குதிரைப் பந்தயம் பார்த்துகொண்டிருப்பான். திருடும் ஏழை சிறுவன், ஆப்பிள் லாப்டாப்பை திறந்து உள்ளே உள்ள போட்டோவை பார்க்கிறான். ராஜு பாயை, ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் இடங்களில்தான் சுற்றுகிறார், ஆனால் பாருங்கள் வில்லன்களுக்கு மட்டும் எங்கே என்று தெரிய மாட்டேன்கிறது.




படத்தில் பரட்டை தாடி மீசை எல்லாம் வைத்து பக்கி மாதிரி ஒரு பாத்திரம் உள்ளது. "ராஜூ பாய்" என்று கத்துமே, அதேதான். அது எதற்கு இந்தப் படத்தில் என்றே தெரியவில்லை. அதே போல போலிஸ். நீங்கள் இந்த ட்ரைலரில் பார்க்கும் அனைத்துக் காட்சிகளுமே, படத்தின் கதையோட்டத்தில் மொக்கையாகவே இருக்கும்.

படத்தில் நாயகியைக் கடத்துவார்கள். சரி ரொம்ப சீரியசான சீன் என்று பார்த்தால், "நீங்க என்ன கடத்தல, நானாத்தான் வந்தேன், அதனால, இது உங்க கணக்குல வராது" என்பார். அப்போதே உஷாராகி கிளம்பியிருக்க வேண்டும். படத்தில் சூர்யா வேறு அடிக்கடி "நீ சாவுரதையும் நாந்தான் முடிவு பண்ணனும்" என்பார். அது படம் பார்ப்பவர்களைக் குறிக்கும் போல.

இந்தப் படம் பார்க்கும்போது, உங்களுக்கு கண்டிப்பாக லிங்குசாமியின் எல்லா படங்களும் நினைவுக்கு வரும். காட்சிகள் அது போல உள்ளது. பீமா படத்தில், திடீரென ரகுவனைக் கடத்தி வைத்திருப்பார்கள் எப்படி என்றெல்லாம் தெரியாது. அதே போல இதிலும் வரும். ஆனால், கொஞ்சம் உஷாராக, எப்படி என்று இரு காட்சிகள் வைத்து விட்டார்கள். கடைசி சண்டையில் ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளது. ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். அது ஏற்கனவே ஜனா என்ற மொக்கைப் படத்தில் வந்து விட்டது.

படத்தில் நல்லதே இல்லையா? இரண்டு பாடல்களும், சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவும் பரவாயில்லை. மற்றபடி சமந்தா வரும் பாடல்களில் ஏன் ஒரு பட்டனை மட்டும் போட்டிருந்தாரோ? ஒரு வேளை அதையும் கழட்டி விட்டிருந்தால் இன்னும், ம்ம்.

படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி, நாணயம் சுண்டி விட்டு விழுவதற்குள் அனைவரையும் வீழ்த்துவது. இது இரண்டு இடங்களில் இரு வேறு பாத்திரங்களுக்கு வரும். அது அவர்களின் நட்பின் புரிதலையும் காட்டும்.



படம் பார்க்கவே முடியாதா என்றால், என்னால் முடியவில்லை. 
உங்களுக்கு சூர்யா பிடிக்கும் என்றால் சரி (சமந்தாவென்றாலும் சரி). மற்றபடி, கொஞ்சம் கஷ்டம்தான்.
மாற்றான் - தோற்றான். அஞ்சான் - நோஞ்சான். சூர்யா, நீ வேற வேலை இருந்தா போய் பார்யா.
எனக்கென்னவோ சிவகுமார் குடும்பத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு பரிகாரம் செய்வது நல்லது. லிங்குசாமி சார், நீங்கள் படங்களை வெளியிடுவதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளலாம். முடியாது இப்படித்தான் என்று படம் எடுத்து எங்களைக் கொல்லலாம் என்று என்ன வேண்டாம். முடியல சார், சத்தியமா.

கடைசியாக ஒன்று. படத்தில், எல்லோரும் ராஜூ பாய், ராஜூ பாய் என்று கத்துவார்கள், பக்கத்தில் இருந்தவர் மெதுவாக சொன்னார் "ராஜூ பாய்தாங்க, ராஜி, ராஜாதில்லாம் தாங்க கேர்ள்".

அஞ்சான் பார்க்க தேவை, கொஞ்சம் அம்ருதாஞ்சன். அம்புட்டுதேன்.

"நீ என்ன பெரிய இவனா? முடிஞ்சா நீ ஒரு நல்ல படமா எடேன்" என்பவர்களின் கவனத்திற்கு மட்டும். நீங்கள் சரவணபவன் போய் சாப்பிடுகிறீர்கள். சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை. உடனே நீங்கள் உங்கள் முகப்புத்தகத்திலோ, கீச்சுகளிலோ இட்டு விடுகிறீர்கள். உடனே அந்த மேலாளர், "சார், சும்மா கொற சொல்லாதீங்க. நீங்க வேணும்னா வந்து இந்த ஹோட்டல நடத்திப் பாருங்க" என்றால் என்ன சொல்வீர்களோ அதே பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

Comments