இராணுவ ஆட்சேர்ப்புக்கு மட்டக்களப்பில் குறைவானோர் பங்கேற்பு

இலங்கையின் இராணுவ சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் யுவதிகளை சேர்த்துக் கொள்வதற்கு நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் 15க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட யுவதிகளை இராணுவ சேவையில் சிப்பாய் மற்றும் எழுதுநர் பதவிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நேர்முகப் பரீட்சைக்கு 13 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தாகவும் அவர்களில் கொஞ்சம் பேர்தான் உரிய தகுதியுடையவர்களாக காணப்பட்டதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
போர் முடிவடைந்த பின்பு மட்டக்களப்பு மாவட்டத்திருந்து ஆட்களை திரட்டுவது தொடர்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை என கூறப்படுகின்றது.

 
ஏற்கனவே வடக்கில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் சர்ச்சைகளும் தோன்றியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுவதிகளை இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தின் அறிவிப்பு தமிழ் மொழியிலேயே முழுமையாக வெளியிடப்பட்டிருந்த போதிலும், தமிழ் யுவதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதாகத் தெரிகிறது.

அம்பாரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை நடக்கவுள்ளதாக தெரிகிறது.

Comments