யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான நடைமுறை - 1

ஏ-9 பாதையினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நகரை வந்தடைவதென்பது மிக இலகுவானதும் செலவு குறைந்ததுமாகவே காணப்படுகின்றது. அதாவது காலை 6 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்திற்கு சென்றால் (முன்பதிவு செய்து டோக்கன் எடுக்க வேண்டியது என்பது அவசியமில்லை) 5, 6 பஸ்கள் நிற்கும்.

ஏற்கனவே பஸ் நிலையத்தில் பதிவு செய்து எடுத்த டோக்கனை காட்டி பெட்டி, சட்டிகளுடன் பஸ்ஸில் ஏறினால் சிறிய மட்டைத் துண்டு அதுதான் பாஸ் ஒன்று தருவார்கள். 2 நிமிட ஓட்டத்தின் பின் இறக்கி வளவொன்றில் விட்டுட்டு சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரிசையில் பரிசோதனைக்காக ஒவ்வொருத்தராக விடுவார்கள்.


ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட பாஸ்ஸை ஒப்படைத்துவிட்டு உடல் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் பெட்டி படுக்கைகளின் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் கிளியரன்ஸ்ஸை வாங்குவார்கள். அங்கு ஒரு சிறிய பதிவு எங்கு போகின்றீர்கள், செல்வதற்கான காரணம் என வினாவுவார்கள். அதை முடித்த பின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியை கேட்பார்கள். அதில் சிவில் அலுவலகத்தின் சீல் அடித்து தருவார்கள்.


அதன் பின்னர் மீண்டும் அதேபோல் சிறிய பதிவு. இவ்வளவும் முடிக்கும் போது நேரமோ காலை 8.45 ஆகிவிட்டது. 10 போக்குவரத்து சபையின் பஸ்களும் இரு தனியார் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுட்டிருந்தது. (இந்த எண்ணிக்கையானது பயணிகளின் எண்ணிக்கையை வைத்து வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.)


பதிவுகளை முடித்த பின்னர் கொட்டகைக்குள் இருக்க வேண்டியது தான். ஒருபுறம் பஸ்கள் வரிசையில் நிற்கும். எல்லோரையும் பதிவு செய்து முடித்த பின்னர் பஸ்களில் ஏறச் சொல்லுவார்கள். அடிபட்டு பிடிபட்டு பஸ்களில் தொங்குவார்கள். போதியளவு பஸ்கள் இருக்கின்றது. இடம் கிடைக்கும் தானே, ஏன் அடிபட்டு ஏறவேண்டும் என்று நம்ம யாழ்ப்பாண தமிழன் யோசிப்பதில்லை! அது தான் கவலையளிக்கிறது. 9.15 மணி ஆகிவிட்டது. பஸ்களில் ஏறி அமர்ந்து கொண்டோம். கொன்டக்டர் ரிக்கட் போட்டுக் கொண்டு உடனயே வந்து விட்டார்.

Comments