கருணாநிதியின் வாழ்க்கைக் குறிப்புகள் சில..

கலைஞர் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் திருக்குவளை எனும் இடத்தில் 1924ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் திகதி பிறந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் மிக நீண்டகாலத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமாவார். திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி தமிழுலகுக்கு அறிமுகமான கருணாநிதி, 1969இல் தமிழகத்தின் முதல்வரானார்.


தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு.முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதிக்கு பத்மாவதி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் ஆகிய மூன்று மனைவிமார்களுடன் 6 பிள்ளைகள் முத்து, அழகிரி, ஸ்டான்லின், தமிழரசு ஆகிய 4 மகன்களுடன் கனிமொழி, செல்வி ஆகிய 2 மகள்கள் கொண்ட சிறிய குடும்பம் தான் கலைஞர் குடும்பம்.


தனது மாணவர் பருவத்தில் கருணாநிதி கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது விடலைப் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் கருணாநிதி உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது.
அரசியல் ஈடுபாடு முழு நேர அரசியல் ஈடுபாட்டுடன் தன் பதினான்காவது வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற திராவிட இயக்கத்தின் முதலாவது மாணவர் பிரிவைத் தோற்றுவித்தவர். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்த உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தி.மு.க.வின் பொருளாளராக 1961ஆம் ஆண்டு பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி, 1957ஆம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் இவர் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
1969-1971 — அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 — இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 — நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 — நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை — ஐந்தாம் முறையாக ஆட்சி

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அக்கட்சி வலுவடைந்தபின் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு இவரை உள்ளாக்கியது. திராவிடக் கழக கொள்கைக்கு முற்றிலும் முரணான இச்செயலை அரசியல் சானக்கியத்தனம் எனக் கருணாநிதியின் ஆதரவாளர்கள் சொல்லிச் சமாளித்தனர். தமிழே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி வந்த கருணாநிதி, 2009இல் ஆயிரமாயிரம் தமிழர்களை இலங்கை பேரின அரசு இனப்படுகொலை செய்யும்போது, மருத்துவமனையில் காலங்கழித்தது, அவரது நாடகத் தன்மையைப் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

கருணாநிதியை ஆதரித்து வந்த தமிழ் தேசியவாதிகளிடத்திலும் அவருக்கிருந்த ஆதரவு சரிந்தது. உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் காலத்தைக் கழிக்கும் வயோதிபர் தமிழகத்தின் முதல்வராக இருப்பது முறைதானா என்ற கேள்வியும் எழும்பத் தொடங்கியது. 1984-1986நாற்பதாண்டுகளுக்கும் மேலவை சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினராக இருந்தார். 1957 -முதல் 2006 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களிலும் வென்றுள்ளார்.எதிர்க் கட்சித் துணைத் தலைவர்-1962-1967.சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக 1977 முதல் 1983 வரை பணியாற்றியுள்ளார்.
1967-69 இல் தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1969 முதல் 1971 வரை 1971 முதல் 1976 வரை 1989 முதல் 1991 வரை 1996 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர். பல அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், ரயில்வே நிலையப் பெயர் மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.

1983இல் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகப் போராடும் வகையில் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, சங்கத் தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், திருக்குறள் உரை மற்றும் உரைநடையிலும் கவிதையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப் பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் மற்றும் பல மேடை நாடகங்களை எழுதியது மட்டுமல்ல, ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகன். தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப்பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர். குறவஞ்சி, தாயில்லாப் பிள்ளை, காஞ்சித் தலைவன், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்கமுடியுமா?, அவன் பித்தனா?, பூக்காரி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், நியாயத் தராசு போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட திரைக்காவியங்களையும் எழுதியது மட்டுமல்ல கண்ணம்மா, மண்ணின் மைந்தன், பராசக்தி, புதிய பராசக்தி, மந்திரகுமாரி, பாலைவனப்பூக்கள், மனோகரா, உளியின் ஓசை என பல திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார் நம்ம கருணாநிதி.
மே 13, 2006இல் தனது 82ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் அதிக வயதுகொண்ட முதலமைச்சர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட கருணாநிதி, இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

1971இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் ‘முனைவர் ‘ பட்டம்; தி கவுன்சில் ஒப் டாக்டர் ஒப் பிலாஸபியால் வழங்கப்பட்ட ‘தமிழவேள்’ பட்டம் வழங்கப்பட்டது மட்டுடல்ல “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ‘இராஜராஜன் ‘ விருதும் வழங்கப்பட்டது. ‘குடியரசு’ பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘முத்தாரம்’ சஞ்சிகைக்கு உயிரூட்டினார்.
தனது சிறுவயதிலேயே ‘முரசொலி ‘ என்ற பத்திரிகையை முதலில் மாத இதழாக, பின்னர் வார இதழாக, பின் நாளிதழாகத் தொடக்கி நடத்தியவர். இப்பத்திரிகையே தற்போது இவருடைய எண்ணங்களை, எழுத்தை, சிந்தனையை, குரலை வெளிப்படுத்தும் இதழாக வந்து கொண்டிருக்கிறது.
மாநில அரசின் செய்தி வெளியீடாக வரும் படச்செய்தி சுருளை தோற்றுவித்தவரும் இவரே. அரசு இதழான ‘தமிழரசு ‘ இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் தோற்றுவித்தவர் கருணாநிதி தான். எல்லோராலும் அன்பாக ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுபவர். தில்லையாடி வள்ளியம்மை நகர், கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகிய பயனுள்ள கட்டிடக் கலையையும் உருவாக்கி நற்பணிகளையும் செய்துள்ளார்.


மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர், நிர்வாகி, நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், எழுத்தாளர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த கவிஞர் மற்றும் ஜனநாயகவாதி போன்ற பல துறைகளில் கலைஞரை அசைக்கமுடியாது என்பது குறிப்பிட்டாகவேண்டும்.


Comments