ஈராக் சென்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து பதவியிலிருந்து விடைபெறும் நோக்கத்துடன் புஷ் நேற்று ஈராக் சென்றார். .
அந்நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேசிய பின்னர் புஷ் ஈராக் பிரதமர் அல் நூரியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, பத்திரிகையாளர் ஒருவர் ஆவேசத்துடன் புஷ்ஷை கடுமையாக திட்டியவாறே தனது சப்பாத்துக்களை கழற்றி புஷ் மீது வீசினார்.
எதிர்பாராத நேரத்தில் தன்னை நோக்கி சப்பாத்து பறந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ் வேகமாக தனது தலையை குனிந்து கொண்டதால் அந்த சப்பாத்துக்கள் அவர் மீது படாமல் சென்றது.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சப்பாத்துக்களை வீசி புஷ்ஷை தாக்கிய பத்திரிகையாளரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர் எகிப்து தொலைக்காட்சி ஒன்றின் ஈராக் நிருபராக பணியாற்றி வருகிறார்.
இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த அதிபர் புஷ், தன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களின் சைஸ் 10 என்பது மட்டுமே தமக்கு தெரியும் என்றார். (பலமுறை சப்பாத்து எறிவாங்கியிருக்கிறார் போலும்... சப்பாத்துடைய அளவுகளை எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கிறாரே)
சப்பாத்து எறிந்த விடயமறிந்த பலரும் தமது சந்தோஷங்களை எஸ்.எம்.எஸ் மூலம் தமது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர் என ஏ.எப்.பி படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.
ஈராக்கில் தங்களுக்கு பிடிக்காதவர்களை மக்கள் செருப்பால் அடித்து அவமதிப்பது வழக்கம்.

ஈராக் அதிபர் பதவியிலிருந்து சதாம் உசேன் நீக்கப்பட்ட பின்னர், அவரது சிலை அகற்றப்பட்டவுடன் ஏராளமான ஈராக் மக்கள் சதாமின் சிலையை தங்கள் செருப்புகளால் அடித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சப்பாத்து அடி மூலம் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு விடைபெறுகிறார் புஷ்.
Comments