இரவில் தூக்கம் இன்றி தவிக்கின்றீர்களா?

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பவர்கள் தூக்கம் வர மாட்டேங்குதே, எப்போது வரும்? என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்களா? அவ்வாறு சிந்திக்கும்போது மூளைக்கு வேலை ஆரம்பித்து விடுகிறது. பிறகு எப்படி தூக்கம் வரும்? மூளை அமைதியாக இருந்தால் தானே சட்டுபுட்டென்று தூக்கம் வரும். தூக்கம் வராவிட்டாலும் எதையும் சிந்திக்காமல் அமைதி காத்திருங்கள். தூக்கம் தானாக வரும்.

ஒருவரிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும். அது தான் விலை மதிப்பற்ற உண்மையான செல்வம். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம்.
இரவில் தூக்கம் இன்றி தவிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. சரியான நேரத்தில் படுக்கைக்குப் போகாதது தான் இதற்கு முழு முதற்காரணம்.

எல்லோரது வீடுகளிலும் டி.வி. இருக்கிறது. அதைவிட கம்பியூட்டர்களையும் பல வீடுகளில் காண முடிகிறது. தூக்கத்தை கெடுக்கும் நவீன சாதனங்களில் இவற்றின் பங்களிப்பும் பெருமளவு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
இரவு நேரம் தொடங்கிவிட்டால் எந்த டி.வி சனலை திருப்பினாலும் மெகா சீரியல்கள் தான். இந்த சீரியல்களை இரவிரவாக விழித்திருந்து பார்க்கும் தாய்க்குலங்கள் நிறையபேர் உள்ளன. பார்க்காவிட்டால் பக்கத்து வீட்டு அன்ரியிடம் மீதி கதையை கேட்கும் தாய்க்குலங்களுடன் மாணவச் செல்வங்கள் ஒருபுறம்.

இதேபோல் டி.வி மெகா சீரியல் பிடிக்கவில்லையென்றால் கம்பியூட்டரில் கேம்சிலும் இன்ரநெற் சட்டிங்கிலும் மூழ்கிக் கிடக்கும் வருங்கால தூண்களும் ஏராளம். பசியைக் கூட மறந்து அதில் ஒன்றிப்போய் விடுகின்றனர். இந்த வர்க்கத்திற்குள் நானும் ஒருத்தன்.
அளவான உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவை சுகமான ஆழ்ந்த இதமான தூக்கத்தை தருகின்றன. காலை, மாலை வேளைகளில் உங்களால் முடிந்த உடற்பயிற்சியை சிறிதுநேரம் செய்யுங்கள். இரவில் படுத்தவுடன் தூக்கம் அப்படியே உங்களை தாலாட்டும்.

தூக்கத்தை கண்களில் தவழச்செய்வதில் பாலுக்கு முக்கிய இடம் உண்டு. படுக்கைக்கு செல்லும் சிறிது நேரத்திற்கு முன்பு பால் அருந்துங்கள். இரவில் நன்றாக தூக்கம் வரும். வாழைப்பழம், பாண் ஆகியவற்றுக்கும் தூக்கத்தை தூண்டக் கூடிய பவர் உண்டு. அதனால் இவற்றை இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். பகல் நேரங்களில் இந்த உணவை தவிர்ப்பது தான் நல்லது. இல்லையென்றால் பகலிலும் தூங்கி விடுவீர்கள். படுக்கச் செல்லும் போது இனிமையான இடைக்கால பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்கலாம். இது சிலருக்கு இடைஞ்சலாகவும், பலருக்கு இனிய தூக்கம் வரவும் வழி அமைக்கும்.

குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்பதற்காக சிலர் அலாரம் வைத்து தூங்குவார்கள். நிறையபேர் அலாரத்தின் ஓசையை அதிக அளவில் வைத்துக்கொண்டு எழுகிறார்கள். இப்படி செய்வது தவறு என்கிறது ஒரு ஆய்வு. அதிகப்படியான அலாரத்தின் ஓசை வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
இனியும்.. தூக்கம் வரவில்லை சொல்ல மாட்டீர்கள்கள்தானே...? அனுபவி ராஜா அனுபவி.

(மித்திரனில் சுட்டு எடிட் பண்ணிய ஆக்கம்)

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.