21 February 2014

யுவதியிடம் பேயோட்டம், வாழ்வை இழந்த இளம் பெண்

யுவதியிடம் பேயோட்டிய சோதிடர், வாழ்வை இழக்க வைத்த சாதனை

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைவலி என கூறிச்சென்ற இளம் யுவதிக்கு ஜோதிடம் பார்த்த நபர் உடம்பில் பேய் இருப்பதாக கூறி உள்ளங் காலை சுட்ட பரிதாபமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட யுவதி ரஞ்சனி குமாரி (16) 77ம் கட்டை, சுவ உதான கம்மாணய, மொறகேவ-ஹொரவ்பொத்தான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த யுவதிக்கு தலைவலி காணப்பட்டதால் ஜோதிடம் பார்ப்பவரிடம் நூலை போட்டு விட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற வேளை யுவதிக்கு உடம்பில் பேய் காணப்படுவதாக தெரிவித்தார்.

பின்னர் இரும்பை நெருப்பில் போட்டு இரண்டு உள்ளங் கால்களையும் சுட்டு காயப்படுத்தியதாகவும் யுவதியின் சகோதரி வசந்தா ஸ்ரீமதி கவலையுடன் அழுத வண்ணம் தெரிவித்தார்.
இரண்டு கால்களையும் சுட்ட பின்னர் உடம்பில் பேய் விலத்திச் சென்றதால் யுவதியின் கால் பத்தியதாக ஜோதிடம் பார்த்த நபர் உறவினர்களிடம் குறிப்பிட்டதாகவும் தெரியவருகின்றது.உண்மையாகவே பாதிக்கப்பட்ட யுவதியின் கஷ்ட நிலையை வீட்டுக்கு சென்று பார்த்தால் அவதானிக்க முடியும். பொலிஸார் ஏழைக் குடும்பத்தில் பிறந்த யுவதிக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்படியாக ஏமாற்றிப் பிழைக்கும் ஜோதிடர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அத்துடன் இப்படியானவர்கள் தொடர்பில் ஜோதிடருக்கு அதி உச்ச தண்டனையினை வழங்குவதன் மூலமே இப்படியான போலி ஜோதிடர்களை உருவாவதைத் தடுக்க முடியும்.

ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

 பஸ்ஸை பிடிக்கச் சென்ற ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

தான் கட்டியிருந்த சாரியே ஆசிரியையொருவருக்கு எமனான சம்பவமொன்று யக்கலை இப்பாகமுவையில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளின் பின்னால் ஆசிரியையொருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவரது சாரி, மோட்டார் சைக்கிளின் பின்னாலுள்ள சில்லில் சிக்கியதால் சைக்கிளிலிருந்து ஆசிரியை கீழே விழுந்துவிட்டார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் மிகவேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் ஆசிரியையின் மீதேறியதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

இராணுவ ஆட்சேர்ப்புக்கு மட்டக்களப்பில் குறைவானோர் பங்கேற்பு

இலங்கையின் இராணுவ சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் யுவதிகளை சேர்த்துக் கொள்வதற்கு நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் 15க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட யுவதிகளை இராணுவ சேவையில் சிப்பாய் மற்றும் எழுதுநர் பதவிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நேர்முகப் பரீட்சைக்கு 13 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தாகவும் அவர்களில் கொஞ்சம் பேர்தான் உரிய தகுதியுடையவர்களாக காணப்பட்டதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
போர் முடிவடைந்த பின்பு மட்டக்களப்பு மாவட்டத்திருந்து ஆட்களை திரட்டுவது தொடர்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை என கூறப்படுகின்றது.

 
ஏற்கனவே வடக்கில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் சர்ச்சைகளும் தோன்றியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுவதிகளை இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தின் அறிவிப்பு தமிழ் மொழியிலேயே முழுமையாக வெளியிடப்பட்டிருந்த போதிலும், தமிழ் யுவதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதாகத் தெரிகிறது.

அம்பாரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை நடக்கவுள்ளதாக தெரிகிறது.

கிளிநொச்சியில் பெண்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்க்க முயற்சி'

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் பெண்களை இராணுவத்தினர் வற்புறுத்தி படையில் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்திருப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் தன்னிடம் முறையிட்டிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வட்டக்கச்சி பிரதேசத்தில் உள்ள புழுதியாற்றுக்குளத்தில் ஏற்று நீர்ப்பாசனம் மேற்கொள்வதுபற்றி நேரடியாகக் கண்டறிவதற்காகச் சென்றிருந்தபோது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்ததாக அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.இளம் பெண்களை இராணுவத்திற்குக் கட்டாயமாக சேர்ப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், இராணுவம் நிலைகொண்டு நிர்வகித்து வருகின்ற வட்டக்கச்சி அரசினர் பண்ணையில் வேலை செய்ய வருமாறு இராணுவத்தினர் இளம்பெண்களை வற்புறுத்துவதாகவும் தன்னிடம் முறையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வட்டக்கச்சி பண்ணையின் ஒரு மூலையில் வடமாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெருமளவான பகுதியில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இங்கு பணியாற்றுவதற்காகவே அவர்கள் இளம் பெண்களை வற்புறுத்தி அழைப்பதாகத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

அங்கு சென்று, இராணுவத்தின் கீழ் வேலை செய்வதற்கு பெண்கள் அஞ்சுவதாகவும் அதேநேரத்தில் தன்னிடம் முறைப்பாடு செய்தவர்களைத் தேடிச்சென்று அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு பிரிவினர் நடந்து கொண்டதாகத் தனக்குத் தகவல் எட்டியிருப்பதாகவும், இந்த விடயங்கள் குறித்து மாகாணசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கட்டாயமாக இராணுவத்திற்கு இளம் பெண்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேட்டபோது, அதனை அவர் மறுத்துரைத்தார்.


 'சிலர் கூறுவதுபோல பலாத்காரமாக எவரையும் படையில் சேர்க்கவில்லை. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை' என்றார் இராணுவப் பேச்சாளர்.

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் சேர்ந்து கொள்வதற்கு வன்னிப்பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
'பெண்கள் படையணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 100 பேரையும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 50 பேரையும் படையில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சேர்க்கப்படுபவர்கள் அவர்கள் விரும்புகின்ற நேரத்தில் படையில் இருந்து விலகிக் கொள்வதற்கும் வசதிகள் இருக்கின்றன' என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.